சென்னை,
பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று அறிவித்தது. இந்நிலையில், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் பேசினார். தொடர்ந்து புதிய அரசியல் இயக்கத்தையும் அண்ணாமலை ஆரம்பித்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி! ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.