சென்னை,
பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை இன்று மாலை 4 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி வந்தார். அவரை முதல்-அமைச்சர் விஜய் நேரில் வரவேற்றார். சென்னை விமான நிலையம் அருகே பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடிக்கு ஆடல், பாடல் கலைநிகழ்சியுடன் பாஜவினர் வரவேற்பு அளித்தனர். பிறகு, சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், பணிகள் முடிக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி இடையே, 15 கி.மீ., துாரம் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். பிரதமர் மோடிக்கு மெட்ரோ ரெயில் மினியேச்சரை பரிசாக முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.
போரூரிலிருந்து பூந்தமல்லிக்கு யுபிஐயில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அவருடன் முதல்-அமைச்சர் விஜயும் அருகில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த திட்ட பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கி கொண்டு வந்தனர் அதனை அவர் கேட்டறிந்தார்.
இந்தநிலையில், பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை, மாலை 4 மணி முதல் துவங்கும் என்றும்,
மெட்ரோ ரெயில் சேவை இரவு 9 மணி வரை இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை முதல் காலை 7 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். மொத்தம் 17 ரயில் நிலையங்கள் இங்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பூந்தமல்லி தொடங்கி போரூர் வரையிலான ரயில் நிலைய பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பணிகள் முழுமையடையாத போரூர் தொடங்கி வடபழனி வரையிலான பாதையில் உள்ள 6 நிலையங்களில் தற்போதைக்கு ரெயில்கள் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் தொடங்கும் மஞ்சள் நிற வழித்தடமானது வடபழனி வரை நீண்டு, பச்சை மெட்ரோ வழித்தடத்தில் இணைகிறது. இந்த புள்ளியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் என இரண்டு மார்க்கங்களிலும் பச்சை வழித்தடத்தில் பயணிகள் பயணிக்கலாம். விமான நிலையத்தை நோக்கி செல்லும் போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலும், எதிர்திசையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பச்சை வழித்தடமானது நீல வழித்தடத்துடன் இணைகிறது. இப்படி சென்னையின் மூன்று முக்கிய மெட்ரோ வழித்தடங்களை இணைக்கும் புள்ளியாக இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் அமைந்துள்ளது.
* வடபழனி தொடங்கி பூந்தமல்லி வரையிலான 15 கிலோ மிட்டரை வெறும் 30 நிமிடங்களில் கடக்கலாம்
* மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஐயப்பன்தாங்கல், போரூர் மற்றும் ஆற்காடு சாலை வழித்தடங்களில் வாகன பயன்பாடு குறையும்
* ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன
* 3 பெட்டிகள் கொண்ட தொடர்வண்டித் தொகுப்புகள், ஒரு பயணத்தில் 900 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை ஆகும்.