தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மீன்பிடி படகுகள் வருடாந்திர கள ஆய்வு: கலெக்டர் அறிவிப்பு

தமிழகத்திலுள்ள பதிவு செய்த மீன்பிடி விசைப்படகுகள், பதிவு செய்யாத மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தையும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியாளர்களை கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கடல் சார் மீன்பிடித்தலை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தையும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியாளர்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2026-ம் ஆண்டிற்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் வருடாந்திர களஆய்வு 26.5.2026 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது என அறிவிப்பு செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் வருடாந்திர களஆய்வு 5.6.2026 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் அறிவிப்பு செய்யப்படுகிறது.

மேலும் நேரடி களஆய்வின் போது காண்பிக்கப்படாத மீன்பிடி விசைப்படகுகள், நாட்டுப்படகுகளுக்கு அரசின் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அந்த படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி அந்த படகுகளின் பதிவு சான்றினை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கள ஆய்வு நடைபெறும் நாளன்று காலை 6 மணிக்கு அனைத்து மீன்பிடி கலன்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்களையும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.