சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற கிராமக் கோவில் பூசாரிகள் மாநாட்டில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதாகும். அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா. இது வெறும் வாய் வார்த்தைக்காக அல்ல. சொற்களில் சொல்வதை செயலில் நிரூபிப்பது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த மாநாடு. உண்மையான ஆன்மீக அன்பர்களும், இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசுதான் திராவிட மாடல் அரசு. இந்த மாநாட்டை பார்க்கும்போது பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஏன் சிலருக்கு எரிச்சல்கூட வரலாம்.
கிராமக் கோவில்களில் பணியாற்றுகிற கிராம பூசாரிகளாகிய நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். உங்களுடைய வாழ்விலும் விடியல் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நமது அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தின திராவிட இயக்கத்தின் உணர்வை நமது அரசில்தான் நிலைநாட்டி இருக்கிறோம். ஒரு காலத்தில் கோவில் இருக்கும் தெருக்களில்கூட பலரால் நுழைய முடியாத நிலைதான் இருந்தது. அதை மாற்றி இன்று கோவிலுக்குள் எல்லா மக்களும் வரலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். அன்னை தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று மாற்றி இருக்கிறோம். இந்த மாற்றம்தான் நாம் விரும்புகிற சமூக முன்னேற்றம். இதைதான் உண்மையான இறை பற்றாளர்களும் விரும்புவார்கள்.
இறை நம்பிக்கையை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு என்பது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று திருமூலர் சொன்ன வழிதான் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். அதேபோல்தான் கலைஞர் அவர்களும் கோவில்கள் கூடாது என்பதல்ல, அவை கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். அந்த வழியில்தான் அனைவருக்கும் மதிப்பளிக்கும், அனைவரின் மாண்பையும் காக்கும், அனைவருடைய உரிமைகளையும் பாதுகாக்கும் துறையாக நம்முடைய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இன்றும் சொன்னால், கடந்த ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பதுகூட மக்களுக்கு நினைவில் இருக்காது. ஆனால் இப்போ தமிழ்நாட்டில் இருக்கும் யாரைக் கேட்டாலும் நம்முடைய சேகர்பாபுவின் பெயரை பளிச்சென்று சொல்வார்கள். அந்த அளவுக்கு நாள்தோறும் ஏதாவது ஒரு விழா, ஒரு கோவிலை புதுப்பிப்பது என அவர் செய்துகொண்டே இருக்கிறார். நான் அதிகமாக எந்த துறையின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் என்று யாராவது கேட்டால், இந்து அறநிலையத்துறை நிகழ்ச்சியில்தான் என்று உடனே பதில் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பாக, வேகமாக செயல்படுகிறார் நம்ம சேகர்பாபு.
தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நம்ம அரசு பொறுப்பேற்ற 1,759 நாட்களில் 4,335 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்கீழ் 29 அர்ச்சகர்களை பணி நியமனம் செய்துள்ளோம். 12 பெண் ஓதுவார்கள் உள்பட 46 ஓதுவார்களை பணி நியமனம் செய்துள்ளோம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த துறையில் 813 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 946 அலுவலர்களின் பதவி உதவி வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கியுள்ளோம். 19 ஆயிரம் ஒரு கால பூஜை திட்ட கோவில் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கி வருகிறோம். ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள் கட்டி தந்துள்ளோம். பணிக்காலத்தில் இயற்கை எய்தும் கோவில் பணியாளர் குடும்பத்துக்கு குடும்ப நல நிதியாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமக் கோவில் பூசுாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களை மீட்கணும் என பெருமுயற்றி எடுத்து அதிலும் சாதனை படைத்துள்ளோம். ரூ.8,440 கோடி மதிப்பிலான 8,140 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். இதுபோல் இன்னும் ஏராளமான சாதனைகள் உள்ளது.
பூசாரிகளின் நலனுக்காக 11 புதிய அறிவிப்புகள் வெளியிட விரும்புகிறேன். முதலாவது அறிவிப்பு: ஒவ்வோர் ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாடை வழங்கப்படும். 2வது அறிவிப்பு: உறுப்பினர் மரணம் அடைந்தால் அவரது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். 3வது அறிவிப்பு: கிராமக் கோவில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உங்களுடைய கோரிக்கையை ஏற்று அது ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும். 4வது அறிவிப்பு: இயற்கை எய்திய உறுப்பினர்களின் ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 5வது அறிவிப்பு: அருகிலுள்ள பெரிய கோவில்கள் மூலம் ஆண்டுேதாறும் 500 பூசாரிகளுக்கு தேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் புத்தொளி பயிற்சி நடத்தப்படும்.
6வது அறிவிப்பு: தற்போது பூசாரியின் மகனுக்கு ரூ.3 ஆயிரம், மகளுக்கு ரூ.5 ஆயிரம் என்று வழங்கப்படும் திருமண உதவித்தொகையான மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். 7வது அறிவிப்பு: பூசாரிகளின் மகன், மகளுக்கு வழங்கப்படும் பள்ளி கல்வி உதவித் தொகை மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.2,000 மற்றும் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். 8வது அறிவிப்பு: பூசாரிகளின் மகன், மகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி ஆண்டுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்படும். 9வது அறிவிப்பு: பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் தொழில் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி ஆண்டுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்படும். 10வது அறிவிப்பு: பூசாரிகளின் மகன், மகள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். 11வது அறிவிப்பு: உறுப்பினர்களுக்க மூக்குக்கண்ணாடி வாங்க வழங்கப்படும் ரூ.500 நிதிஉதவி ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
சமரசமும், சமத்துவமும் தான் ஆன்மிக பாதையாக இருக்க முடியும். நம்மை பொறுத்தவரை சமத்துவத்தை போற்றும் அனைவரையும் நாம் போற்றுவோம். மக்களுடைய சுயமரியாதை உரிமைகளும் மதிக்கப்படணும். நாம் அதை செய்வதால்தான் ஆன்மின பெரியோர்கள் நமக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்காங்க. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இத்தகைய சமத்துவம், சகோதரத்துவம் நிலை பெறணும். மக்களுக்குள் ஒற்றுமைதான் ஓங்கி வளரணும். மக்களை பிரிக்க நினைக்கிற கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்கணும். உங்கள் அனைவருக்கும் நான் கொடுக்கும் வாக்குறுதி என்பது, உங்கள் நலன் காக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கேன். உங்கள் ஆதரவோட திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும். வெல்வோம் ஒன்றாக.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து அவர், ஒரு கால பூஜை திட்ட கோவில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகையான ரூ.1,500ஐ வழங்கினார்.
மயிலாப்பூரில் நடைபெற்ற கிராமக் கோவில் பூசாரிகள் மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ. த.வேலு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், மயிலம் ஆதீனம் சிவஞான வாரியர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஜூயர் ராமானுஜ சுவாவிகள், கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசகம், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் ஜெயச்சந்திரன், கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் கோபால்ஜி, மண்டல குழு தலைவர் மதன்மோகன், ஆன்மிக பெரியோர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கிராமக் கோவில் பூசாரிகள் பலர் கலந்து கொண்டனர்.