தமிழக செய்திகள்

20 கிலோ மீட்டர் சுற்றளவில் சுங்கச்சாவடிகளை ஒட்டி வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு வருடாந்திர ‘பாஸ்’: மத்திய அரசு திட்டம்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் புதிய 'பாஸ்டேக்' அடிப்படையிலான வருடாந்திர 'பாஸ்' திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் வடிவமைக்க உள்ளது.

சென்னை,

சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு வருடாந்திர 'பாஸ்' அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வருடாந்திர 'பாஸ்'

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் தற்போதுள்ள நடைமுறைப்படி, வணிக நோக்கமற்ற சொந்த வாகனங்களுக்கு மாதம் ரூ.350 செலுத்தி டிஜிட்டல் 'பாஸ்'களை பெற்று, புதுப்பித்து பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் மாதாந்திர கட்டணத்தை புதுப்பிப்பதில் சிரமங்கள் மற்றும் கூடுதல் செலவு ஏற்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் புதிய 'பாஸ்டேக்' அடிப்படையிலான வருடாந்திர 'பாஸ்' திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் வடிவமைக்க உள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டு கட்டணமாக சுமார் ரூ.3 ஆயிரம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இதன்மூலம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக் கட்டணத்தில் சுமார் 28 சதவீதம் வரை சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிம்மதி அளிக்கும்

வேலை, தொழில் மற்றும் உள்ளூர் தேவைகளுக்காக தினமும் ஒரே சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தினால் சுங்கச்சாவடி அமைத்துள்ள நிறுவனங்களுக்கு ஏற்படும் கட்டண இழப்பை மத்திய அரசே ஈடுசெய்யும் என கூறப்படுகிறது. இந்த புதிய திட்டம் சுங்கச்சாவடிகளை ஒட்டி வாழும் மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT