தமிழக செய்திகள்

பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை..! மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்

பழனி முருகன் கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

பழனி,

பழனி கோவில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரிவான விசாரணை

இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொள்வார்கள்.

சஸ்பெண்ட்

முன்னதாக பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழக பதிவுத்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து நடவடிக்கைகள்

பழனி கோவில் நில பதிவு முறைகேடு தொடர்பான புகாரில் நடைபெற்று வரும் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் மேலும் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.