சென்னை,
'ஜெம்' வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் மீது 7-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு உதவியாக 'ஜெம் கிரானைட்' நிறுவனத்தின் மேலாளரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிறுமிகளை சீரழித்த 84 வயதான தொழில் அதிபர் ஜெம் வீரமணி 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி என்ற பெண் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுடன் கைது செய்யப்பட்டார்.
வீரமணி சிறுமிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை வைத்திருந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் மற்றும் சிறுமிகளை அழைத்து வந்த டிரைவர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர் மீதும் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சமீபத்தில் ஜெம் வீரமணியிடம் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 200 கேள்விகளை எழுப்பி 14 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு குழுவினருக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் அதிகாரப்பூர்வமாக செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வுகள் குறித்தும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் வாரந்தோறும் செய்திக்குறிப்பு வெளியிடுகின்றனர். அதன்படி நேற்றும் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில் சிறப்புப் புலனாய்வு குழுவினர் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 7-வதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தி வீட்டில் சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது
ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் கானத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு, அவர் நடத்தி வரும் சாமுண்டீஸ்வரி நேச்சுரல் கிரானைட் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வழக்குகள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில், ஜெம் வீரமணிக்கு அவர் நடத்தி வரும் 'ஜெம்' கிரானைட் நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் உதவியிருப்பது தெரியவந்தது. எனவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சக்திவேலிடம் வீரமணி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப்பரிமாற்றங்கள் குறித்த விசாரணை நடக்கிறது.
இதுவரை பாதிக்கப்பட்ட 11 சிறுமிகள் குறித்த புகார்களின் பேரில் வீரமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.