தமிழக செய்திகள்

தமிழ்நாடு மின்வாரியத்தில் மேலும் ஒரு சாதனை: 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு

700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 700 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்), இன்று ( 03.08.2026 ) உதவி செயற்பொறியாளர்கள் (மின்னியல்) ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பொறியாளர்களுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படியும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் அறிவுறுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளிப்படையான, மூப்பு மற்றும் தகுதி அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி உயர்வின் மூலம், மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்வரும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு, புதிய மின் இணைப்புகள், துணை மின் நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும் .

முக்கியமான மைல்கல்

இப்பதவி உயர்வு பெற்றுள்ள பொறியாளர்கள், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின் விநியோக சேவையை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மின்வாரிய ஊழியர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, ஊழியர்களின் மன உறுதியையும், பணித் திறனையும் மேலும் உயர்த்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.