தமிழக செய்திகள்

ஆவடி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு

ஆவடி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடியை அடுத்த கோவில்பதாகை கலைஞர் நகரை சேர்ந்தவர் ரோஜா (வயது 64). கடந்த 19-ந் தேதி இவரது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரோஜா, அவருடைய மகன் சங்கர்ராஜ் (41), பேத்தி கீர்த்திகா (11) மற்றும் பேரன் கவுதம் (10) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 4 பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந் தேதி ரோஜாவும், நேற்று முன்தினம் காலை கீர்த்திகாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சங்கர்ராஜிம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. கவுதம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

சிலிண்டர் வெடித்த விபத்தில் தாய், மகன், பேத்தி ஆகிய 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.