கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய அதிநவீன படகின் வெள்ளோட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் அவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றைக் காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர்.
கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், போதிய படகு வசதிகள் இல்லாததால் படகுத் துறையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் படகு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று, திமுக ஆட்சியில் புதிய அதிநவீன சுற்றுலா படகு வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கோவாவில் 150 இருக்கைகள் கொண்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய படகு கட்டப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகிற்கு 'பெருந்தலைவர் காமராஜர்' என பெயரிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை வழித்தடத்தில் 'பெருந்தலைவர் காமராஜர்' படகின் வெள்ளோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், அப்படகு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் காத்திருப்பு நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.