தமிழக செய்திகள்

அந்தியூர்: கொளுத்தும் வெயிலால் தண்ணீரை தேடி அலையும் காட்டு யானைகள்

கடந்த சில நாட்களாக அந்தியூர் வனப்பகுதியில் கொளுத்தும் வெயிலால் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

அந்தியூர்,

அந்தியூர் அடுத்த பர்கூர், தட்டக்கரை வனப்பகுதியில் ஏராளமான மரம், செடிகள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தைப்புலி, மான், கரடி, காட்டுப் பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதேபோல் பர்கூர் வனப்பகுதிக்குள் குட்டைகள், காட்டாறுகள் இருக்கின்றன. அதனால் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் பசும்புற்களை மேய்ந்துகொண்டு, காட்டாறுகளிலும், குட்டைகளிலும் தண்ணீர் குடித்து தாகம் தணித்து வந்தன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்தியூர் வனப்பகுதியில் கொளுத்தும் வெயிலால் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன்காரணமாக செடி, கொடிகள் கருகிவிட்டன. மரங்கள் காய்ந்துவிட்டன. மேலும் குட்டைகள் மற்றும் காட்டாறுகள் வறண்டு விட்டன. இதனால் பர்கூர் வனப்பகுதி பசுமையை இழந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வனவிலங்குகள் தாகம் தீர்க்க வழியில்லாமல் தவிக்கின்றன. காட்டு யானைகள் அதன் குட்டிகளுடன் நீண்ட தூரம் நடந்து சென்று வரட்டுப்பள்ளம் அணையில் தண்ணீர் குடிக்கின்றன.

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வரட்டுப்பள்ளம் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அதிக அளவில் யானைகளை காணமுடிகிறது. இந்தநிலையில் தண்ணீரை தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியைவிட்டு வெளியேறாமல் இருக்க குட்டை, தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT