திருச்சி,
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 19 இடங்களிலும் சோதனை நடந்தது.
சென்னையில் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லை நகரில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
அரசு டெண்டர்களில் கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாக நடந்த வசூல் தொடர்பாக சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம்.அலுவலகத்தில் இருந்து வழக்கமான ஒரு பைல், வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருந்த துண்டு சீட்டை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான். எனது வீட்டில் 3வது முறை சோதனை நடைபெற்று உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.