டிகே பிரபு 
தமிழக செய்திகள்

கனிமவளம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு : அமைச்சர் டிகே பிரபு தகவல்

தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல் தரமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறினார்.

திருப்புவனம்:

தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு தற்காலிக தடை விதித்திருந்தது. இந்த தடையை எதிர்த்து குவாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட புதிய விதி அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி அதை ரத்து செய்தது.

மேலும், அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவையும் நீக்கி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.இந்த நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழக கனிம வளங்கள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் அடிப்படையில்தான் பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடையை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.

தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல் தரமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய வாய்ப்பு இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் எங்கும் மணல் கொள்ளை நடைபெறக்கூடாது என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம். கனிமவள கொள்ளை தொடர்பாக புகார்கள் வந்தாலும், ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT