தமிழக அரசு 
தமிழக செய்திகள்

அகரமுதலி இயக்ககத்தின் 2026-ம் ஆண்டு விருதுகளுக்கு தமிழறிஞர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழறிஞர்கள் http://sorkuvai.tn.gov.in அல்லது http://awards.tn.gov.in என்ற இணையத்தளம் வழியாக 11.12.2026-ஆம் நாள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை,

அகரமுதலி இயக்ககத்தின் 2026-ம் ஆண்டு விருதுகளுக்கு தமிழறிஞர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-

அகரமுதலி திட்ட இயக்ககம்

சொற்களின் வளமே மொழியின் நலம். அகராதிகளே சொற்களின் ஆவணக்காப்பகமாக விளங்குகின்றது என்பதை உணர்ந்து செயலாற்றிவரும் அகராதியியல் அறிஞர்கள் படைப்பாளர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் வழியாகப் பல்வேறு விருதுளையும், பரிசுகளையும் வழங்கிச் சிறப்பு சேர்த்துவருகிறது.

5 வகையான விருதுகள்

அவ்வகையில் நடப்பு 2026ஆம் ஆண்டிற்கான 5 வகையான விருதுகள் மற்றும் தூயதமிழ்ப் பற்றாளர் பரிசுக்குத் தகுநிறை தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன.

  • தேவநேயப் பாவாணர் விருது (1 நபர்): ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை.

  • வீரமாமுனிவர் விருது (1 நபர்): ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை.

  • தூயதமிழ் ஊடக விருது (2 நபர்கள் - அச்சு ஊடகம், காட்சி ஊடகம்): தலா ரூ.50 ஆயிரம் ரொக்கம், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை.

  • நற்றமிழ்ப் பாவலர் விருது (2 நபர்கள் - மரபுக்கவிதை, புதுக்கவிதை): தலா ரூ.50 ஆயிரம் ரொக்கம், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை.

  • தூயதமிழ்ப் பற்றாளர் விருது (38 நபர்கள்): தலா ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.

  • தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு (3 நபர்கள்): தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.

இணையத்தளம்

விருதுபெறுவதற்கு தகுதிவாய்ந்த தமிழறிஞர்கள் http://sorkuvai.tn.gov.in அல்லது http://awards.tn.gov.in என்ற இணையத்தளம் வழியாக 11.12.2026-ஆம் நாள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044- 29520509 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளலாம். உரிய நாளுக்குள் (11.12.2026) வரப்பெறும் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்பெறும் என்பதனை அறிஞர் பெருமக்கள் நினைவிற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT