மாணவர்கள் 
தமிழக செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - 30-ந் தேதி கடைசி நாள்

குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நெல்லை,

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மத்திய அரசு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27-ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் பள்ளிகளில் நடப்பாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.

மாணவிகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு

இந்த திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9,10-ம் வகுப்பு படிப்பவருக்கு ரூ.75,000, மற்றும் 11, 12-ம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகையாக மத்திய அரசால் வழங்கப்படும். 30 சதவீதம் மாணவிகளுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் 15.12.2026 .

ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம்..

மாணவ-மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் அல்லது சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2025-26-ம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT