சென்னை,
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், 24 பேர் கொண்ட அறங்காவலர் குழு மற்றும் தலைவர் பதவி காலம் முடிந்ததால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு, இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை, ஆந்திர மாநில அரசால் நியமிக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2024-ம் ஆண்டு அக்டோபரில், தனியார் தொலைக்காட்சி நிறுவனர் பொல்லினேனி ராஜகோபால் நாயுடு தலைமையில், தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் பதவி காலம், கடந்த மாதம் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, ஆந்திர மாநில அறக்கட்டளை மற்றும் ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையங்கள் சட்டப்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை அரசு செயலர் வினய்சந்த், வருவாய் துறை செயலர் கண்ணபாபு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓராண்டு அல்லது அறங்காவலர் குழு அமைக்கும் வரை, பதவியில் இருப்பார்கள் என, ஆந்திர அரசு அறிவித்து உள்ளது.