அமைச்சர் ப. ராஜ்குமார்  
தமிழக செய்திகள்

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் ப. ராஜ்குமார் வழங்கினார்

வணிக மனைகள் மின்னணு ஏலம் முறையில் https://tntenders.gov.in இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

சென்னை,

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ப. ராஜ்குமார் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமைச்சர் ப. ராஜ்குமார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக,தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

41 நபர்களுக்கு பணி நியமன ஆணை

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், ப. ராஜ்குமார் இன்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைமை அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுரையின் படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, வீட்டுவசதி வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் (சிவில் / மின்னியல்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கும், நில அளவையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கும் என மொத்தம் 41 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அனைத்து வருவாய் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச் சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதியினை வழங்கி வருகிறது. மேலும், தற்போது இவ்வாரியம் பல அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டிடங்கள், மறுகட்டுமான திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 31 தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்/ மின்னியல்) காலிப் பணியிடங்களுக்கும், 10 நில அளவையர் பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை

மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் தற்போது விற்பனைக்கு தயாராக உள்ள குடியிருப்பு மற்றும் வணிக அலகுகள் குலுக்கல் முறையிலும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பிரத்யேக விற்பனை மற்றும் சேவை மையம்

இதனை முன்னிட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கான பிரத்யேக விற்பனை மற்றும் சேவை மையம் தொடங்கப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான தகவல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சேவை மையத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கு. பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிமையாகவும் உரிய சேவைகளை வழங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இணையதளம்

மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வணிக மனைகள் மின்னணு ஏலம் (e-Auction) முறையில் https://tntenders.gov.in இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதேபோன்று, அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் ஆகியவை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://twhb.tn.gov.in வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பொதுமக்களிடமிருந்து எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்படும் இப்பொன்னான வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தி கொண்டு. விண்ணப்பிக்க தேவையான கடைசி நாள் விவரத்தினை பார்த்து உடனடியாக தங்களது தேவைக்கேற்ப குடியிருப்புகள், வீடுகள், மனைகள் மற்றும் வணிக அலகுகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் வே. சிவா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர், மற்றும் வாரிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT