சென்னை,
மேற்கு வங்காளத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச சந்தால் பழங்குடியின மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற நமது ஜனாதிபதி திரவுபதி முர்முவைத் திட்டமிட்டே அவமானப்படுத்திய மேற்கு வங்க முதல்-மந்திரியான மம்தா பானர்ஜியின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
தமது மாநிலத்திற்கு வருகை தரும் நாட்டின் மூத்த குடிமகளான ஜனாதிபதியை, நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்ற அடிப்படை அரசு பொறுப்பைக் கூட அறியாத மம்தா பானர்ஜிக்கு மாநிலத்தின் முதல்-மந்திரியாக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது? ஒருவேளை நமது ஜனாதிபதி பழங்குடியினத்தைச் சார்ந்தவர் என்பதால் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் அவரது மந்திரிகளும் பாரபட்சமாக நடந்து கொண்டனரா?
அதுமட்டுமன்றி ஏற்கனவே மாநாடு நடக்கவிருந்த இடத்தைக் கடைசி நேரத்தில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு வேறொரு இடத்தில் மாற்றியமைத்து, சந்தால் பழங்குயின மக்களை அலைக்கழித்து, மாநாட்டிற்கு வரும் கூட்டத்தைத் திட்டமிட்டே நீர்த்துப் போகச் செய்யுமளவிற்கு பழங்குடியின மக்களின் மீது மேற்கு வங்காள முதல்-மந்திரிக்கு அப்படியென்ன வெறுப்பு? பழங்குடியின மக்களில் இருந்து உருவான முதல் ஜனாதிபதிக்கு மேற்குவங்காள முதல்-மந்திரி அளிக்கும் மரியாதை இதுதானா?
நமது தாய்நாட்டையும், தாய்நாட்டின் பூர்வகுடிகளையும் தங்களது தோழமைத் தலைவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துவதை, சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் சகித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.