சென்னை,
செங்கல்பட்டு - அரக்கோணம் ஒரு வழி ரெயில் பாதையை, 1,538 கோடி ரூபாயில் இரட்டை வழிப் பாதையாக மாற்ற, தெற்கு ரெயில்வே திட்டமிட்டு இருந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த நிலையில், பணிகளை துவக்க நிதி கேட்டு, ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், அரக்கோணம் - செங்கல்பட்டு இடையிலான இரட்டை வழிப்பாதை திட்டத்திற்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே 68 கி.மீ தூரத்துக்கு இரட்டை வழிப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.933 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது ரெயில்வே நிர்வாகம்.
இரட்டை ரெயில்வே பாதை பயன்பாட்டிற்கு வந்தால், தினமும் 13 ரெயில்கள் இயக்கும் இடத்தில், 40 ரெயில்கள் வரை விரிவுபடுத்த முடியும். பயணியர் ரெயில் மட்டுமின்றி, சரக்கு ரெயில்களும் கூடுதலாக இயக்க முடியும்.
இந்தத் தடத்தில் ஒற்றைப் பாதை இருப்பதால், பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற ரெயில் நிலையங்களில் எதிரே வரும் ரெயிலுக்காகப் பல மணி நேரம் ரெயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இரட்டைப் பாதை அமைந்தால் இந்தத் தாமதம் குறையும்.
அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை சென்னை கடற்கரை வழியாகச் செல்லாமல், தக்கோலம் வழியாகச் செல்லும் ஒரு பிரத்யேக புறநகர் ரெயில் சேவையை இயக்குவதற்கு இந்த இரட்டை வழித்தடம் ஒரு வாய்ப்பை உருவாக்கும் என கூறப்படுகிறது. ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அதிரடி அறிவிப்பால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.