ஏரல்,
ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஏரலில் சேர்மன் அருணாச்சலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாச்சலசாமி கோவிலில் வலம் வருதல் நடைபெறுகிறது. 4-ந் தேதி இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி. 5-ந் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ந் தேதி வரை பல்வேறு சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந் தேதி பகல் 1.30 மணிக்கு சாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, மாலை 5 மணிக்கு இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 11 மணிக்கு சாமி கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளால் நடக்கிறது.
13-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை நடக்கிறது. 14-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.