சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு கிடந்ததாகவும், தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதி அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
மாணவர்களின் ஆரோக்கியத்தையும், பெற்றோர்களின் நம்பிக்கையையும் ஒருசேர சீர்குலைக்கும் இதுபோன்ற செய்திகளை, விஜய் தலைமையிலான அரசு இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது.
அதுமட்டுமன்றி, தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் அனைத்தும் 'ஏ' தரம் (Agmark A grade) மற்றும் குறைந்தபட்சம் 46 கிராம் எடை கொண்டவைகளாக இருக்க வேண்டும் என்ற விதிகள் இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற குளறுபடிகள் எப்படி தொடர்கின்றன? அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களின் கோழிப்பண்ணைகளில் இருந்து தரமற்ற முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா? கொள்முதல் செய்யப்படும் முட்டைகள் முறையாக பதப்படுத்தப்படுகின்றனவா? அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு முட்டைகள் வழங்கப்படுகின்றனவா? அல்லது, மாணவர்களுக்கென ஒதுக்கப்படும் சத்துணவு முட்டைகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றனவா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு அரசு சார்பில் இருந்து முறையான விளக்கம் தேவை.
முந்தைய திமுக ஆட்சியைப் போலவே, எளிய பின்புலம் கொண்டவர்கள் பெருமளவில் படிக்கும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில், தற்போதைய அரசும் சமரசம் செய்யக் கூடாது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.