தமிழக செய்திகள்

நாகை கோர்ட்டு வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நாகை கோர்ட்டு வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் ராஜராஜ சோழனுக்கு சிகிச்சை நடந்த புத்தவிகார் குறித்த உண்மைகள் வெளிவருமா? என்ற ஆவலுடன் வரலாற்று ஆவலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாகை கோர்ட்டு வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் ராஜராஜ சோழனுக்கு சிகிச்சை நடந்த புத்தவிகார் குறித்த உண்மைகள் வெளிவருமா? என்ற ஆவலுடன் வரலாற்று ஆவலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சோழ சாம்ராஜ்யம்

உலகம் முழுவதும் ஆட்சி செலுத்திய சாம்ராஜ்யங்களுள் சோழ சாம்ராஜ்யத்திற்கு என்று தனி இடம் உண்டு. பொன்னி (காவிரி) நதி பாயும் இடங்கள் மட்டுமின்றி, கடல் கடந்தும் சோழ சாம்ராஜ்யம் நீடித்ததற்கான சான்றுகள் உள்ளன.

சோழர் காலத்தில் நாகையில் துறைமுகம் இயங்கி வந்தது. சங்ககாலத்தில் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய பூம்புகார் போல, பல தொல்லியல் சிறப்பம்சங்கள் நாகை நகரில் புதைந்து கிடக்கின்றன.

நாகையில் கி.பி. 10 முதல் 13-ம் நூற்றாண்டு வரை பிற்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் புத்தம், சமண,சமயங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

சூடாமணி புத்த விகார்

அதன்படி கிடாரம் (தற்கால வடக்கு மலேசியா) பகுதியை சேர்ந்த வணிகர்கள் வியாபாரத்துக்காக சோழ நாட்டின் நாகை துறைமுகத்திற்கு வந்திறங்கிய போது, அங்கு பாதுகாப்பாக தங்குவதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் அனுமதியுடன் புத்த விகாரை கட்டினர்.

இந்த சூடாமணி புத்த விகார் நாகையில் தற்போது உள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் கட்டப்பட்டது என்றும், இது தொடர்பாக ஆனைமங்கலம் செப்பேட்டில் குறிப்புகள் உள்ளது என்றும் வரலாற்று ஆர்வலர்கள் உறுதிப்பட தெரிவித்து வந்தனர்.

ராஜராஜ சோழன் எனும் அருண்மொழிவர்மன் உடல் நலம் குன்றி இருந்தபோது, சூடாமணி புத்த விகாரின் கீழ் நிலவரையில் புத்த துறவிகள் அவருக்கு சிகிச்சை அளித்ததாக பொன்னியின் செல்வன் கதையில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை

நாகை பழைய கோர்ட்டு கட்டிடத்தின் வடகிழக்கு அடித்தள பகுதியில் மூடப்பட்ட சுரங்கப்பாதையைத் திறந்து தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் ராஜராஜ சோழனுக்கு சிகிச்சை நடந்த சூடாமணி புத்த விகாரின் நிலவரை குறித்த உண்மை தெரியவரும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்த செய்தி கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில்

படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சோழ சாம்ராஜ்யத்தின் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தொல்லியல் துறையினர் ஆய்வு

இதையடுத்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நேற்று தொல்லியல் துறையினர் நாகை கோர்ட்டு வளாகத்தில் ஆய்வு செய்வதற்காக வந்தனர்.

கீழடியில் முதன்முதலாக அகழாய்வு செய்த இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். நாகை கோர்ட்டு, கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து கட்டிடங்களின் தொன்மை குறித்து பார்வையிட்டனர்.

அப்போது தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது:-

புத்தர் சிலைகள், வாழ்விடங்கள்

நாகை மாவட்டத்தில் உள்ள தொன்மையான கட்டிடங்கள், சோழர்கள் வாழ்ந்த பகுதிகள் குறித்து ஆய்வு செய்து முழுமையான தரவுகளை சேகரித்து வருகிறோம். நாகை கோர்ட்டு, கோட்டாட்சியர் அலுவலகம், புத்தமங்கலம், ஆனைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக கள ஆய்வு செய்துள்ளோம்.

புத்தர் சிலைகள், வாழ்விடங்கள், பழமையான கோவில்கள் உள்ளிட்டவைகள் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.. தமிழர்களின் தொன்மைகளை மீட்டெடுப்பது கடமையாகும். அதன்படி தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

நினைவுச் சின்னம்

அப்போது முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தொல்லியல் துறையினரிடம் கூறியதாவது:- சோழர் ஆட்சி கால சாட்சியாக திகழும் நாகையில் சோழ சாம்ராஜ்யத்தின் பல்வேறு பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. இதனை ஆய்வு செய்து வெளிக்கொண்டு வருவதன் மூலம் தமிழனின் பெருமையை உலகறிய செய்ய முடியும்.

பழைய நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியை ஆய்வு செய்து நாகை மாவட்டத்தின் அடையாள நினைவுச்சின்னமாக மாற்ற வேண்டும். மக்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

எதிர்பார்ப்பு

இந்த ஆய்வின்போது சென்னை பல்கலைக்கழக பேராசிரியரும், தொல்லியல் ஆலோசகருமான சேரன், துணை தொல்லியல் கண்காணிப்பாளர் குமரன், உதவி தொல்லியலாளர் பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வானது நாகை மாவட்டத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் துறையினரின் இந்த ஆய்வின் மூலம் நாகையில் ராஜராஜ சோழனுக்கு சிகிச்சை நடந்த புத்த விகார் குறித்த உண்மைகள் தெரியவருமா? என்ற ஆவலுடன் வரலாற்று ஆவலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

SCROLL FOR NEXT