சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து தெருமின்விளக்குகளும் 100 சதவீதம் ஒளிர்வதை கண்டறிவதற்கான களஆய்வு 15.06.2026 அன்று மாநகராட்சி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதிகள், மயானபூமிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின்விளக்குகளும், உயர்கோபுர மின்விளக்குகளும் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறாக, திருவொற்றியூர் மண்டலத்தில் 14,405, மணலி மண்டலத்தில் 13,115, மாதவரம் மண்டலத்தில் 20,603, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 20,537, ராயபுரம் மண்டலத்தில் 15,948, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 19,580, அம்பத்தூர் மண்டலத்தில் 30,268, அண்ணாநகர் மண்டலத்தில் 22,118, தேனாம்பேட்டை மண்டலத்தில் 23,059, கோடம்பாக்கம் மண்டலத்தில் 24,271, வளசரவாக்கம் மண்டலத்தில் 21,647, ஆலந்தூர் மண்டலத்தில் 15,924, அடையாறு மண்டலத்தில் 25,197, பெருங்குடி மண்டலத்தில் 24,057, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 20,556 என மொத்தம் 3,11,285 தெருமின்விளக்குகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்விளக்குகள் அனைத்தும் 100% ஒளிர்வதை ஆய்வு செய்திட மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில், 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களில் வார்டு வாரியாக மண்டலத்தில் உள்ள அலுவலர்கள் மூலமாக 15.06.2026 திங்கட்கிழமை மாலை களஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் ஒளிராத மின்விளக்குகளைக் கண்டறிந்து அனைத்து விளக்குகளும் 100% ஒளிர்வதை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஒளிராத மின்விளக்குகள் தொடர்பாக மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.