சென்னை,
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடர வேண்டுமென பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
செல்லா நோட்டு அறிவிப்பின் மூலம் பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற்ற மோடி அரசு இந்திய மக்களை பணமில்லா பரிவர்த்தனைகளுக்குள் வலுக்கட்டாயமாக தள்ளிய பின்புலத்தில் தற்போது யு.பி.ஐ கட்டமைப்பில் கோடிக்கணக்கான வணிகர்களும், பொதுமக்களும் இணைந்துள்ளனர். இந்த நிலையில், சட்டப்படி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் இலவசம் என்பதை மாற்றி கட்டணம் விதிக்கப்பட்டு இருப்பது எளிய, நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும்.
இது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிறது. ஏற்கனவே வரிச் சுமைகள், பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள் என்பதால் அல்லலுறும் மக்கள் மீது இன்னொரு சுமை ஏற்றப்பட்டுள்ளது. சொந்த பணத்தை மக்கள் கையாளவே கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மோடி அரசாங்கம் மேற்கொண்ட சட்ட திருத்தத்தை தொடர்ந்து இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, வரும் அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.300 வரை MDR கட்டணம் விதிக்கப்படும். மேலும், ரெயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், வேளாண் உள்ளீடுகள் போன்ற துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 நிலையான கட்டணம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
NPCI-யின் அறிவிப்பின்படி, MDR தொகை வங்கிகளுக்கும், யு.பி.ஐ. செயலி நிறுவனங்களுக்கும் செல்லும். ஏற்கனவே வங்கி பரிவர்த்தனை சார்ந்து பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததற்கான அபராதம் வழியாகவும் தனியார் வங்கிகள் கோடிக் கணக்கில் பணத்தை குவிக்கின்றன. இப்போது கட்டணக் கொள்ளையில் யு.பி.ஐ நிறுவனங்களும் கூடுதலாக இணைந்து கொள்கின்றன.
வணிகர்களுக்கான கட்டணம் என்று கூறப்பட்டாலும், இந்தச் சுமை சரக்கு, சேவைகளின் விலையில் ஏற்றப்பட்டு விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே, பொருளாதார சுமையால் அவதிப்படும் சாதாரண மக்கள், சிறு வணிகர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.
ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் எண்ணிக்கையில் குறைவாக தெரிந்தாலும், மொத்த யு.பி.ஐ. பரிவர்த்தனை மதிப்பில் அவை கணிசமான அளவாகும். ரூ.1 லட்சம் வரை மாதாந்திர யு.பி.ஐ. வரவு உள்ள சிறு வணிகர்களுக்கு தொடர்ந்து மூன்று மாதங்கள் சற்று கூடுதலாக பரிவர்த்தனை நடந்தால், அவர்களும் கட்டண வரம்புக்குள் வருவார்கள் என NPCI தெரிவித்துள்ளது. சில ஆயிரங்கள் மாதம் சம்பாதிக்கும் சிறு வியாபாரிகள் கூட இந்தக் கட்டண வலைக்குள் இழுக்கப்படுகிறார்கள்.
இது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி சபையின் நிர்ப்பந்தத்திற்கு மோடி அரசு பணிந்து கொண்டு வந்திருக்கிற கட்டண விதிப்பே ஆகும். UPI பரிவர்த்தனையில், 53 சதவிகிதம் சந்தைப் பங்கை வைத்துள்ள போன்.பே, 35 சதவிகிதம் வைத்துள்ள ஜி.பே நிறுவனங்கள் இரண்டும் அமெரிக்காவை சார்ந்தவை. ஆகவே, இந்திய எளிய, நடுத்தர மக்களின் கைகளில் இருந்து பறித்து பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு மடை மாற்றம் செய்கிற முடிவே இது.
எனவே, யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும், மக்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில், யு.பிஐ. கட்டமைப்பை லாப நோக்கில் ஏகபோக பெருநிறுவனங்களுக்கு சாதகமானதாக மாற்றக் கூடாது என்றும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.