சென்னை,
மக்களின் உயிரை காக்க வேண்டிய பொறுப்புமிக்க அரசு மருத்துவமனைகள் மரண கூடங்களாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், வடுவூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரும், கபாடி வீரருமான விக்னேஷ்வரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த மாணவரை வடுவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு ஆகியவை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசால், மக்களின் உயிரை காக்க வேண்டிய பொறுப்புமிக்க அரசு மருத்துவமனைகள் மரண கூடங்களாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏழை, எளிய, விளிம்புநிலை மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதைவிட மதுபானக் கூடங்களை மேம்படுத்துவதுதான் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்து, வெற்று விளக்கங்களை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவத்துறை அமைச்சரின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, மருத்துவ துறையின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் மாணவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, வடுவூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவ துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.