தமிழக செய்திகள்

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவுகள் காரணமா..? - அமைச்சர் விளக்கம்

அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்தது தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி

அப்போது அவர் கூறுகையில், “எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பதால் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர். கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் ராஜீவ்

இந்நிலையில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், “எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல. மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் ராஜீவ் கூறினார்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

இதனிடையே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “"சென்னையின் ஜீவாதாரமாக விளங்கும் வடசென்னை கொசஸ்தலை ஆறு மற்றும் அதன் முகத்துவாரப் பகுதிகள், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் தொடர்ந்து மாசடைந்து வருகின்றன. ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகிவிட்டதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொசஸ்தலை ஆற்றுப் பகுதியைச் சூழலியல் மண்டலமாக அறிவித்து, அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்

இதேபோல் பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் கூறுகையில், “சென்னையின் முக்கிய நதிகளில் ஒன்றான கொசஸ்தலை ஆற்றில், அனல் மின் நிலையங்கள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கிறது. மீன்கள் செத்து மிதப்பது முதல் முறை அல்ல. இதனை தடுத்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT