தமிழக செய்திகள்

தனி தொகுதிகளில்.. பட்டியல் இனத்தவர்கள்தான் போட்டியிடுகிறார்களா..? அர்ஜுன் சம்பத் வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

இந்து, புத்தம், சீக்கிய மதங்களை சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள்தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனரா? என்று பரிசீலிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தனி தொகுதிகளில் பட்டியல் இனத்திற்கு பதிலாக மாற்று சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை நிராகரிக்க உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடை பெறவுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் தனித்தொகுதிகளில் பட்டியல் இனத்தவர் போட்டியிடுகின்றனர். ஆனால், இந்து, புத்தம், சீக்கியம் மதங்களில் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றும் பட்டியல் இனத்தவர்தான் பட்டியல் இனத்தவர் என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது.

இதைத்தான் சுப்ரீம்கோர்ட்டும் அண்மையில் வலியுறுத்தியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 44 தனித் தொகுதிகளில் போட்டியிட உள்ளவர்களில் 90 சதவீதத்தினர், இந்து, புத்தம், சீக்கிய மதங்களை பின்பற்றாதவர்கள். அவர்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதனால் தனித்தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை பரிசீலிக்கும்போது, அரசியல் அமைப்பு சாசனம் மற்றும் சுப்ரீம்கோர்ட்டு கூறியுள்ளபடி இந்து, புத்தம், சீக்கிய மதங்களை சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள்தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனரா? என்று தீவிரமாக பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.