சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பெண் குழந்தைகளைக் காக்க வேண்டும் என நமது பாஜக நேற்று போராட்டம் நடத்திய நிலையில், கடந்த 18 நாட்களில் திருநெல்வேலியில் மட்டும் 17 போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ளதாக இன்று வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 18 நாட்களில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் இத்தனை குற்றங்கள் பதிவாகியிருக்கிறது என்றால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 1 மாதத்தில் தமிழகம் முழுவதும் எத்தனை குற்றங்கள் அரங்கேறியுள்ளன? எத்தனை பதிவாகாமல் மறைக்கப்பட்டுள்ளன? எத்தனை குழந்தைகளின் நலன் சீரழிக்கப்பட்டுள்ளது? அண்ணன், தாய் மாமன் என மேடைக்கு மேடைக்கு நடித்துவிட்டு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் தமிழகக் குழந்தைகளின் பாதுகாப்பை அம்போவென தூக்கியெறிவது தான் ஜோசப் விஜய் குறிப்பிட்ட மாற்றமா?
போக்சோ குற்றங்கள் பெருகும் வேளையில், முட்டுக்கொடுக்கும் வசனங்களைப் பேசுவதை விடுத்து, உடனடியாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவெக அரசு முனைய வேண்டும்! குதிரை பேரம் பேசுவதிலும் ரீல்ஸ் வெளியிடுவதிலும் காட்டும் வேகத்தில் ஒரு துளியாவது தமிழக குழந்தைகளைப் பாதுகாப்பதில் காட்டினாலே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தானாக சீராகிவிடும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.