சென்னை,
செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மர்ம மரணம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய ஆறு-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களின் தொடர்ச்சியாகவே இச்சம்பவமும் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள், இம்மரணம் குறித்த உண்மை நிலையை விளக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப்பொருட்களின் தாராளப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள தவெக அரசின் ஏவல் துறையாகக் காவல்துறை மாறியுள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய இம்மரணம் குறித்த செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியிருப்பதும், செக்கானூரணி காவல் நிலையக் காவல் ஆய்வாளரைப் பணியிடைநீக்கம் செய்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வரும் பொதுமக்களை அவமதிக்கும் வகையில் பேசுவது, தரக்குறைவாக நடத்துவது, மிரட்டி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுமாறு அச்சுறுத்துவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது எனத் தங்களுக்கான பொறுப்புணர்வையும் கட்டுப்பாட்டையும் மறந்து, அரக்கத்தனமாகச் செயல்படும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்தக் காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, செக்கானூரணி காவல் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடைபெற்றுள்ள மரணம் குறித்து விரிவான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வருவதோடு, புகார் அளிக்க வருபவர்களாக இருந்தாலும், விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களாக இருந்தாலும், அனைவரையும் மனித மாண்புடன் நடத்த வேண்டும் எனத் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும் என முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.