தமிழக செய்திகள்

மத்திய மாநில அரசுகள் நெசவுத் தொழிலை அழிக்கத் துடிக்கிறதா? - வேல்முருகன்

நூல்விலை உயர்வுக்கு யார் பொறுப்பு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

மத்திய மாநில அரசுகள், நெசவுத் தொழிலை அழிக்கத் துடிக்கிறதா? நூல்விலை உயர்வுக்கு யார் பொறுப்பு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நூல்விலை உயர்வு

தமிழகத்தின் பாரம்பரியத் தொழிலான நெசவுத்தொழில் ஏற்கனவே மூலப்பொருள் தட்டுப்பாடு, மின்கட்டண உயர்வு, சந்தை மந்தநிலை போன்ற காரணங்களால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையைத் தொடர்ந்து படிப்படியாக உயர்த்தி, தற்போது கிலோவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.30 முதல் ரூ.40 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது நெசவுத் தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூற்பாலைகள் தொடக்கத்தில் ரகங்களுக்கு ஏற்ப (Count-wise) கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தின. அடுத்தடுத்த மாதங்களில் பருத்தி விலை ஏற்றம் மற்றும் வரத்துக் குறைவைக் காரணம் காட்டி மேலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டது.

நடப்பு மாதத்தில் மேலும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டதால், மொத்தமாக ஒரு கிலோவிற்கு ரூ.40 வரை விலை ஏற்றம் கண்டுள்ளது.

நிதியுதவி வழங்க வேண்டும்

இந்தத் தொடர் விலை ஏற்றத்தால், நெசவு உற்பத்தியாளர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பழைய விலை ஒப்பந்தங்களின்படி துணிகளை உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் கடுமையான நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றனர். புதிய ஒப்பந்தகளைப் பெற முடியாமல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறு மற்றும் குறு விசைத்தறி, கைத்தறி கூடங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குட்பட்டு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியுதவி மற்றும் உற்பத்தி ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும்.

முன்னுரிமை அளிக்க வேண்டும்

அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் (Co-optex / TNCSC) மூலம் பருத்தி மற்றும் நூலை முன்கூட்டியே கொள்முதல் செய்து, நெசவாளர்களுக்குச் சந்தை விலையைவிடக் குறைந்த விலையில் தடையின்றி மானியத்தில் வழங்க நிரந்தரக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

கூடுதல் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தும் வகையில், தற்போது வழங்கப்படும் இலவச மின்சார உச்சவரம்பை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.

பள்ளிச் சீருடைகள், பொங்கல் வேட்டி சேலை உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்துத் துணி கொள்முதல்களிலும் உள்ளூர் கூட்டுறவு மற்றும் நலிவடைந்த நெசவாளர் சங்கங்களுக்கே முழு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தேவையை நிறைவு செய்த பிறகே ஏற்றுமதி..

மாவட்ட வாரியாக மூலதன நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு நெசவுக் குழுமங்களைக் கண்டறிந்து, சிறப்பு நிதி மறுசீரமைப்புத் தொகுப்பை செயல்படுத்த வேண்டும்.

பருத்தி மற்றும் நூல் விலையில் மாதாந்திர அடிப்படையில் நிகழும் கட்டுப்பாடற்ற விலை உயர்வைத் தடுத்து, நிலையான தேசிய விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

உள்நாட்டு ஜவுளித் தொழிலின் தேவையை முழுமையாக நிறைவு செய்த பிறகே மூலப்பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உண்டாக்கி நூல் விலையை உயர்த்தும் பருத்தி பதுக்கல்காரர்கள் மீதும், கமாடிட்டி சந்தை (MCX) வாயிலான ஊக வணிகத்தின் மீதும் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்களின் எதிர்காலப் பிரச்சினை

மத்திய அரசின் மூலப்பொருள் விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்முதல் மானியத்தை சிறு நெசவாளர்களுக்கு மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.

சிறு மற்றும் குறு நெசவு நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் நடைமுறை மூலதனத் தேவைகளுக்காக குறைந்த வட்டியில் நீண்டகால சிறப்பு கடனுதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

நெசவுத்தொழில் நலிவடைவது என்பது ஒரு தொழில்துறையின் இழப்பு மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக இத்தொழிலை மட்டுமே நம்பி வாழும் எளிய மக்களின் எதிர்காலப் பிரச்சினை. நெசவாளர்களின் தறி ஓசை முழுமையாக நின்றுபோகும் அவல நிலை ஏற்படுவதற்கு முன்பே, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT