தமிழக செய்திகள்

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியா?

பலத்த மழை காரணமாக, குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிப்பது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குற்றாலம் அருவி

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.தென்காசி, குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் குளிர்ந்த காற்று பலமாக வீசியது. புளியரை பகுதியில் வீசிய சூறைக்காற்றால், அறுவடை செய்யும் நிலையில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்துள்ளன. எனவே, அவற்றை அறுவடை செய்ய விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியா?

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-வது ஆண்டாக தற்போது தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க வருகிற 1-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தகவல் பரவியது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜிடம் கேட்டபோது, குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வந்த தகவலில் உண்மை இல்லை. இதுகுறித்து அரசிடம் இருந்து எந்தவித உத்தரவும் வரவில்லை. அவ்வாறு ஏதேனும் உத்தரவு வந்தால் அதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றார்.

அதிகாரிகள் ஆய்வு

இதற்கிடையே, பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி, சுகாதார அலுவலர் ராஜகணபதி மற்றும் ஊழியர்கள் குற்றாலத்தில் நேற்று மாலை ஆய்வு செய்தனர். மெயின் அருவிக்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் பட்சத்தில், அவர்களை எவ்வாறு சமூக இடைவெளியில் நிறுத்துவது என்பன உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்ந்தனர்.

தற்போது அரசு உத்தரவிட்டு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அவர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.