சென்னை,
பல்கலைக்கழகங்கள் அடுக்குமாடி கட்டடங்களாக சுருங்குகின்றனவா? மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான விதிமுறைகளில் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், நமது உயர்கல்வி கட்டமைப்பின் எதிர்காலம் குறித்து ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, 2026 மூலம், இதுவரை தனியார் பல்கலைக்கழகம் அமைக்க தேவையான 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் என்ற நிபந்தனை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இனி, சென்னை மாநகராட்சி பகுதியில் 12 ஏக்கர். பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர். மாநிலத்தின் பிற பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் இருந்தால் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க முடியும். மேலும், நிறுவனம் பராமரிக்க வேண்டிய நிரந்தர நிதியும் ரூ. 50 கோடியிலிருந்து ரூ. 25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலத்தை பெறுவது கடினம் என்பதால் இந்த தளர்வு தேவைப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டடங்கள், விடுதிகள், ஆய்வகங்கள், விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டே புதிய அளவுகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நில பற்றாக்குறையை சமாளிப்பதற்காக விதிமுறை மாற்றப்பட்டதா? அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனங்களை அதிகரிப்பதற்கான தடைகள் அகற்றப்படுகின்றனவா? கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்வதைவிட அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறதா? அல்லது தனியார் நிறுவனங்களின் லாப கணக்கா?
இந்தக் கேள்வியை நான் இன்று மட்டும் கேட்கவில்லை! தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத் திருத்த முயற்சி கடந்த திமுக ஆட்சி காலத்திலும் முன்வைக்கப்பட்டது. அப்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நான், மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு, சமூகநீதி, ஏழை எளிய குடும்பங்களின் எதிர்காலம் உள்ளிட்ட அம்சங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சட்டப்பேரவையிலேயே சுட்டிக்காட்டினேன்.
பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அப்போது திமுக அரசு அந்த மசோதாவை திரும்ப பெற்றது. 2026 பிப்ரவரி 20 அன்று சட்டப்பேரவையில் அது அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டது. ஆனால், இன்று அதே விவகாரம் வேறு வடிவில் மீண்டும் நம் முன் நிறுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் திரும்ப பெறப்பட்ட முயற்சியை, இன்றைய அரசு மாற்றிய வடிவில் மீண்டும் முன்னெடுத்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
அதனால்தான் நான் மீண்டும் கேட்கிறேன். அன்று எழுந்த ஆட்சேபனைகளுக்கு இப்போது என்ன பதில்? அப்போது தேவைப்பட்ட மறுபரிசீலனை இன்று ஏன் தேவையில்லை? மாணவர்களின் நலன் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்றைய அரசு என்ன விளக்கம் அளிக்க போகிறது?
ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தை அதன் நிலப்பரப்பை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் நிலப்பரப்பை கணிசமாக குறைக்கும் நிலையில், அதற்கேற்ப கட்டாயமான உள்கட்டமைப்பு மற்றும் கல்வி தர அளவுகோல்கள் இன்னும் வலுவாக இருக்க வேண்டும்.
பல்கலைக்கழகம் என்பது வகுப்பறைகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது அறிவையும் ஆராய்ச்சியையும் உருவாக்கும் சமூக அமைப்பு. தரமான பேராசிரியர்கள், சிறந்த ஆராய்ச்சி, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சூழல், வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு ஆகியவையே அதன் உண்மையான அடையாளம்.
கல்வி வணிகமாகிவிடக் கூடாது. ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, கட்டண சலுகை, இடஒதுக்கீடு ஆகியவை எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதற்கு அரசு தெளிவான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
தனியார் முதலீட்டை வரவேற்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் முதலீட்டின் பெயரில் கல்வியின் நோக்கம் மாறக்கூடாது. அரசு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலையில், தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு விதிமுறைகளை தளர்த்துவதற்கு முன்பாக, அரசு தனது கல்வி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
எனவே, 2026-ம் ஆண்டுக்கான தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தின் கீழ் உருவாகும் நிறுவனங்களுக்கு கல்வி தரம், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வக மற்றும் ஆராய்ச்சி வசதிகள், மாணவர் பாதுகாப்பு, விடுதி மற்றும் அடிப்படை வசதிகள், கட்டண வெளிப்படைத்தன்மை, சமூகநீதி மற்றும் மாணவர் உரிமைகள் ஆகியவற்றில் கடுமையான, வெளிப்படையான விதிமுறைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.