புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பஸ் நிலையத்திற்குள் உள்ளே வெளியே செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. இந்நிலையில் வடிகால் அமைத்து தார்சாலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டவுன் பஸ்கள் மட்டும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றன. இதையடுத்து நேற்று இரவு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பஸ்சும், உள்ளே நுழைய முயன்ற தனியார் பஸ்சும் நெரிசலில் சிக்கிக் கொண்டது. இதனால் 2 பஸ்களும் உரசி கொண்டு எங்கும் செல்ல முடியாமல் இருந்தது. இதைதொடர்ந்து 2 பஸ் டிரைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் பஸ் நிலையத்திற்குள் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.