கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அரியலூர் அரசுப் பள்ளியில் மனித மலம் வீச்சு: திமுக ஆட்சியின் மறுவடிவமாக மாறிய தவெக அரசு - நயினார் நாகேந்திரன்

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கடந்த கால வேங்கைவயல் சம்பவத்தின் கொடூரம் இன்று தவெக ஆட்சியிலும் தொடர்வது, திமுக ஆட்சியும் தவெக ஆட்சியும் ஒன்றே என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில், பட்டியலின ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் மேஜையில் மனித மலம் வைக்கப்பட்டதும், பட்டியலின ஆசிரியர்களுக்குச் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நவம்பர் 10-ம் தேதி நடந்த இக்கொடுமையில், கல்வி அதிகாரி வருவதற்கு முன்பே தடயங்களை அழித்து, வெறும் இடமாற்றத்துடன் விவகாரத்தை மூடிமறைக்க முயன்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த கால வேங்கைவயல் சம்பவத்தின் கொடூரம் இன்று தவெக ஆட்சியிலும் அரசுப் பள்ளியிலேயே தொடர்வது, திமுக ஆட்சியும் தவெக ஆட்சியும் ஒன்றே என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. இரண்டு வாரங்களாகக் காவல்துறை விசாரணையைத் தாமதப்படுத்துவதற்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்; மேலும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT