கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வை தி.மு.க.வில் இணைய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குதிரை பேரம் நடத்தியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான த.வெ.க.வை சேர்ந்த சரவணன் தன்னிடமும் பேரம் பேசியதாக ஆடியோக்களை வெளியிட்டு நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தன்னை தி.மு.க.வில் சேர அறிவுறுத்தி அதிகமானோர் தன்னிடம் பேரம் பேசினர். ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை தருவதாக கூறினர். முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் இதுதொடர்பாக என்னிடம் பேரம் பேசினர். நான் ஒத்துக்கொள்ள மறுக்கவே, எனக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். சமீபத்தில் நான் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதுவது போல் வந்தது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், எம்.எல்.ஏ சரவணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஆயுதப்படையில் இருந்து இரண்டு காவலர்கள் அவரது பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில், எம்.எல்.ஏவுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.