தமிழக செய்திகள்

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் 83.15 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு பெருவிழாவான தேர்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 95 ஆயிரத்து 716 பேர், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 96 ஆயிரத்து 921 பேர், திருநங்கை வாக்காளர்கள் 868 பேர் என மொத்தம் 28 லட்சத்து 93 ஆயிரத்து 505 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக 975 இடங்களில் 4 ஆயிரத்து 85 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 315 வாக்குச்சாவடி மையங்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 192 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடி மையமும், அதே போன்று பெண்கள் மட்டும் வாக்களிப்பதற்காக 'பிங்க்' வாக்குச்சாவடி மையங்கள், மாதிரி வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிரம மின்றி வாக்குப்பதிவு செய்யும் வகையில் சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டிருந்தது. முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்திருந்து, வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் வாக்கை செலுத்தினார்கள். கோடை வெயில் கொளுத்தினாலும் சென்னையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

சென்னையில் மாலை 6 மணி நிலவரப்படி 83.15 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 61.90 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதன்படி 21.25 சதவீதம் வாக்கு அதிகரித்து உள்ளது. ஒரு விரல் புரட்சி போல் மக்கள் ஆர்ப்பரிப்பால் இந்த வாக்குப்பதிவு சதவீதம் வரலாற்று சாதனையாகவும் பதிவானது.

'சீல்' வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதன்படி, ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மெரினா ராணிமேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும்,

பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியா கராயர்நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்துக்கும் எடுத்து செல்லப்பட்டன.

இந்தப்பணி இன்று காலை 6 மணி வரை நடந்துள்ளது. இதனையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்டிராங் ரூம்களில் வைத்து, கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. இந்த 3 மையங்களுக்கும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதி அன்று இந்த ஸ்டிராங் ரூம்கள் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.