தமிழக செய்திகள்

தேனி மாவட்ட சிறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு; கண்காணிப்பு தீவிரம்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு பதிலாக இதுவரை புதியவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.

தேனி,

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 43 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தப்பியோடிய கைதிகள் அனைவரும் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக சிறை காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லை என்றும், சிறையின் 5 கண்காணிப்பு கோபுரங்களில் காவலர்கள் பணியில் இல்லாததுடன், பிரதான நுழைவு வாயிலும் திறந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நுழைவு வாயிலுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் யாரும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

அதன் எதிரொலியாக சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 கண்காணிப்பு கோபுரங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 3 அறைகளின் கதவுகளையும் இரும்பு சங்கிலியால் பிணைத்துப் பூட்டும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு பதிலாக இதுவரை புதியவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.

இதற்கிடையே, சிறையில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிளை சிறையை மூடிவிட்டு அங்கு பணியாற்றும் காவலர்களை தேக்கம்பட்டி சிறைக்கு மாற்றவும் சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க, சிறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT