புதுடெல்லி,
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கியிருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை தொடர்பான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என சி.பி.ஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.