தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று நடந்த பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை; அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ - மாணவியரும், இதுதவிர தனித்தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேரும், சிறைத்தேர்வர்களாக 281 பேரும் பிளஸ் 2 வகுப்புக்கான தமிழ் பொதுத்தேர்வு எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய பொதுத்தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று நடந்த பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

அதன்படி, பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்கள் 8 ஆயிரத்து 319 பேரும், தனித்தேர்வர்கள் 1 ஆயிரத்து 600 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 919 பேர் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.