ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 18-ந் தேதி 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் மண்டபத்தை சேர்ந்த ஒரு படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர். இந்த 22 மீனவர்களும் தற்போது இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.
இந்நிலையில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் விசைப் படகுகள் இன்று (சனிக்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தெரிவித்திருந்தார்.