சென்னை,
நயினார் நாகேந்திரனை கைது செய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக பாஜக தலைவர் சகோதரர் நயினார் நாகேந்திரனை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை, தவெக அரசும் அதன் காவல்துறையும் தீவிரவாதிகளைத் துரத்திச் செல்வதைப் போல அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து, வழிமறித்துத் தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவெக அரசின் பொய் பித்தலாட்டங்களை இன்று தோலுரித்துக் காட்டியுள்ள நிலையில், அதனைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுவதோடு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையை, அதிகார வர்க்கத்தின் ஏவல் கருவியாகப் பயன்படுத்துவதைத் தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.