தமிழக செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்தது முறையற்றது - ஜி.கே.வாசன்

தமிழக அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் நில அளவைப் பிரிவில் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் அலுவலர்களின் உயிர், உடைமைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீத பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை அரசு அழைத்து பேசாததால் மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினரின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் அரசுப்பணியும், மக்கள் பணியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்தது முறையற்றது. தமிழக அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.