தமிழக செய்திகள்

முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக ஆதரவாளரை கைது செய்க! - நயினார் நாகேந்திரன்

நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக ஆதரவாளரை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் காப்பாற்றுகிறாரா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கைது செய்யாமல் இருப்பது ஏன்?

ஆட்சிக்கு வந்த நாள் முதலே தான் சார்ந்த ஒரு மதத்தைப் பற்றி பெருமையாக பேசுவதும், மற்ற மதங்களையும், அன்னைத் தமிழை இழிவுபடுத்தி பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ள தவெக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர், இவர்களைப் பின்பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் எங்கள் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானையும், இந்து மத நம்பிக்கைகளையும் மிகக் கீழ்த்தரமான முறையில் இழிவுபடுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

'மதநல்லிணக்கம்' என்று வசனம் பேசும் தலைவர் ஜோசப் விஜய், தனது கட்சியின் ஆதரவாளர் இந்து கடவுள்களை இவ்வளவு ஆபாசமாகச் சித்தரிப்பதைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்? வழக்கு பதிவு செய்த பிறகும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?

காப்பாற்ற நினைக்கிறாரோ?

அவரின் இந்த மவுனம், 'ஜோசப் விஜய்' எனும் அதிகார நிழலில் ஒளிந்துகொண்டு, இந்து மதத்தின் மீது நஞ்சைக் கக்கி வரும் இத்தகைய நபர்களை அவர் காப்பாற்ற நினைக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யே, கோடிக்கணக்கான மக்களின் ஆராதனைக்குரிய முருகப் பெருமானை இழிவுபடுத்திய இந்த நபர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், தவெக அரசு பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும். எங்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என தவெக அரசையும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.