தர்மபுரி:
சாம்பல் புதன்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சாம்பல் புதன்
கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு சிலுவையில் அறையப்பட்டு, 3-வது நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வு ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) கிறிஸ்தவர்களால் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் விதமாக இந்த தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
இந்த தவக்காலத்தின் ஆரம்ப நாள் சாம்பல் புதன், திருநீறு புதன் என அழைக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையான நேற்று தொடங்கியது.
தவக்காலம் தொடங்கியது
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனையுடன், கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு பங்கு தந்தைகள் அருளாசி வழங்கினர்.
தர்மபுரி பாரதிபுரத்தில் அன்னசாகரம் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் பேராலய வளாகத்தில் நேற்று சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் தர்மபுரி சமூக சேவை மைய பங்குத்தந்தை இயேசுராஜ், உதவி பங்கு தந்தை லிவின் பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களது நெற்றியில் பங்குதந்தை அருள்ராஜ் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டார்.
சி.எஸ்.ஐ. சியோன் ஆலயம்
தர்மபுரி சி.எஸ்.ஐ. சியோன் தேவாலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தேவாலய ஆயர் பிரான்சிஸ் பெர்னாட்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தீய பழக்க வழக்கங்களை கைவிடும் விதமாக இந்த தவக்காலத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதேபோன்று கோவிலூரில் உள்ள தேவாலயத்தில் பங்குத்தந்தை ஏசுதாஸ் தலைமையில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. செல்லியப்பட்டியில் பங்குத்தந்தை மதலைமுத்து தலைமையிலும், கடகத்தூரில் பங்குத்தந்தை சவுரியப்பன் தலைமையிலும், பாலக்கோட்டில் பங்குத்தந்தை கென்னடி தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதேபோல் பூலாப்பட்டியில் பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையிலும், பி.பள்ளிப்பட்டியில் பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையிலும், பொம்மிடியில் பங்குத்தந்தை ஆரோக்கிய கென்னடி தலைமையிலும், தென்கரைக்கோட்டையில் பங்குத்தந்தை வினோத் தலைமையிலும் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தவக்காலத்தை தொடங்கினர்.