சென்னை,
காலி மது பாட்டில்களை திரும்ப பெற தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை தேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர். அதே நேரத்தில், இன்று மதியம் 12 மணிக்கு சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், மது வாங்கச் சென்ற மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போராட்டம் நடத்தியவர்கள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவரும் காலி மது பாட்டில்களை திரும்பி வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. மேலும், இனி வருங்காலங்களில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், தன்னிடம் நேரில் வந்து தெரிவிக்குமாறும், போராட்ட மனப்பான்மை கொள்ளக்கூடாது என்று நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில், போராட்டத்தை கைவிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பணியாளர்கள் முடிவு செய்தனர். மதியம் வரை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.