தமிழக செய்திகள்

பெரிய ரவுடியாக ஆசை... பட்டாக்கத்தியுடன் 'ரீல்ஸ்' வெளியிட்ட வாலிபர் கைது

ஏரியாவில் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக பல இடங்களில் இருந்து பட்டாக்கத்திகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசன் நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியை வைத்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். ரீல்சை பார்த்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டில் சுத்திகள் அதிகமாக இருப்பதாகவும் அந்த ரீல்சில் அவர் பதிவு செய்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

இந்த ரீல்சை சமூக ஆர்வலர் ஒருவர் பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல் ஆய்வாளருக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ரீல்ஸ் வெளியிட்டவர் திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ஆதித்யா (வயத19) என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் வீட்டில் 7 பட்டாக்கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரிடம் ஆதித்யா கூறுகையில், பெரிய ரவுடியாக வர வேண்டும் என்ற எண்ணத்தில், ஏரியாவில் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக பல இடங்களில் இருந்து பட்டாக்கத்திகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்து ரீல்ஸ் வெளியிட்ட ஆதித்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் ரீல்ஸ் பதிவு செய்வதற்காக மட்டும் கத்தியை வாங்கினாரா? அல்லது வேறு ஏதேனும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்துவதற்காக கத்தி வாங்கினாரா? என்ற பல கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT