தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை

வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி உள்ளது. முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 31-ந் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் மாவட்டங்களில் பிரசாரம், பொதுக்கூட்டம், ரோடு ஷோ ஆகிய வற்றில் கலந்துகொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க. கடந்த 2021-ம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் கண்டு உள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ந்தேதி மயிலாப்பூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தினமும் 2 அல்லது 3 இடங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு முதல் தேர்தலில் ஆட்சியை பிடித் தது போல த.வெ.க.வும் இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி களம் இறங்கி இருக்கிறது. அந்த கட்சியின் ஒரே நட்சத்திரமாக இருக்கும் விஜய், பல்வேறு மாவட்டங்களில் சென்று ரோடு ஷோ சென்றபடி வாக்கு சேகரித்து வருகிறார். அவர் இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் நேரடி போட்டி என கூறி வருகிறார்.

நாம் தமிழர் கட்சி தனது கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது. மற்ற கட்சிகள் செய்ய தயங்கும் காரியத்தை, சீமான் துணிந்து தனது வேட்பாளர்கள் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கினார். காரைக்குடியில் சீமான் போட்டியிட்டாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

கோடையின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஒட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிர சாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய் கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், த.வெ.க. தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள். சீமான் காரைக்குடியில் நிறைவு செய்கிறார்.

இதனையடுத்து தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் இன்று மாலை 6 மணிக்கு பிறகு வெளியிடக்கூடாது. அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல்தான் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.