கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 6.26 லட்சம் பயணிகள் பயணம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் நள்ளிரவில் கடும் அவதியடைந்ததாக கூறப்படுகிறது.

பேருந்துகள் கிடைக்காததால் நள்ளிரவிலேயே மக்கள் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து போராடும் சம்பவமும் நிகழ்ந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 6.26 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று (23.04.2026) நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

21.04.2026 அன்று முதல் இன்று (23.04.2026) நண்பகல் 1 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 5,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 5,545 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 10,637 பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.26 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது பயணிகளின் வருகை சீராக உள்ளதாலும், வழக்கமான பேருந்து சேவைகளே பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருப்பதாலும், இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கமானது இத்துடன் நிறைவு செய்யப்படுகிறது. பொதுமக்களின் தேவையைத் தொடர்ந்து கண்காணித்து, இயல்பான பேருந்து போக்குவரத்து தடையின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.