தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க.வில் முன்னாள் சபாநாயகர் தனபால் உள்பட 13 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் மறுப்பு

அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் புதுமுகங்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. போட்டியிடும் 167 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 23-ந் தேதி வெளியிடப்பட்டது. 23 பேரின் பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று 2-வது கட்டமாக 127 பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுவரை மொத்தம் 150 தொகுதிகளுக்கு அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இதில் 17 பேர் பெண் வேட்பாளர்கள், 46 பேர் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் ஆவார்கள். 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அ.தி.மு.க.வில் முன்னாள் சபாநாயகர் ப.தனபால் உள்பட தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 13 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதாவது, முன்னாள் சபாநாயகர் ப.தனபால் (அவினாசி), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி), சேவூர் ராமச்சந்திரன் (ஆரணி), சக்கரபாணி (வானூர்), செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி), சித்ரா (ஏற்காடு), சுந்தர்ராஜன் (சங்ககிரி), பாலசுப்பிரமணியம் (சேலம் தெற்கு), ராஜாமுத்து (வீரபாண்டி), மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), மகேந்திரன் (மடத்துக்குளம்) ஆகியோர் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட பட்டியலில் அடங்குவார்கள்.

இதில், முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் பெயர், கடந்த 23-ந் தேதி வெளியான முதல் பட்டியலிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய அவினாசி தொகுதி இந்த முறை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் அமைச்சர்ககள் சேவூர் ராமசந்திரன், வெல்லமண்டி நடராஜன், வைகைச்செல்வன், சரோஜா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மீதமுள்ள 17 பேரின் பெயர்கள் கொண்ட 3-வது பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் இடம்பெறுமா? என்று பார்ப்போம்.