தமிழக செய்திகள்

நெருங்கும் சட்டசபை தேர்தல்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தி.மு.க. எம்.பி. மனு

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கிரிராஜன் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கிரிராஜன் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கு மனுக்களில், "முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, மாநகராட்சி பகுதியில் சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்.இ.டி. விளக்குகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு என பல வழக்குகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.சத்யா, சேலம் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளன.

இவர்கள் மீதான வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளன. இதுகுறித்து, மத்திய அமலாக்கத்துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்குகள் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.